ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நேரலை ஆண்டு இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ​​ஒரு ரஷ்யப் பத்திரிகையாளர் தனது காதலிக்குத் திருமணம் செய்ய முன்மொழிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அதிபர் புடினின் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் இருந்த போது, சிவப்பு வண்ண டை அணிந்து இருந்த, 23 வயதான பத்திரிகையாளர் கிரில் பஜானோவ் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை ஏந்தியபடி, ரஷ்ய அதிபர் புடினின் கவனத்தை ஈர்த்தார். என் காதலி இப்போது இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஓலேச்கா, என்னை மணந்து கொள்' என பஜானோவ் செய்தியாளர்கள் நிறைந்திருந்த அரங்கில் கூறினார்.

நேரலை ஒளிபரப்பு தொடர்ந்து கொண்டிருந்தபோது, ​​இந்த எதிர்பாராத நிகழ்வு பார்வையாளர்களிடையே சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது. பின்னர் பஜானோவ் தனக்கு ஒதுக்கப்பட்ட கேள்விக்கு நோக்கி திரும்பி விட்டார். அதை தொடர்ந்து எங்களுக்கு ஒரு முக்கியச் செய்தி கிடைத்துள்ளது. இங்குள்ள நம்மில் ஒருவருக்கு இது மிகவும் முக்கியமானது என்று நெறியாளர் கூறினார்.

கிரில் பஜானோவின் காதலி அவரது முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பு மீண்டும் கைதட்டலை பெற்றது. ரஷ்ய அதிபர் புடினும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின், திருமணம் செய்துகொண்டு ஜோடியாக மாஸ்கோ க்ரெம்ளின் மாளிகைக்கு வரும்படி தம்பதிக்கு அழைப்பு விடுத்தார். அவரது இந்த அறிவிப்பு, பத்திரிகையாளர் சந்திப்பில் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.