ஜெயலலிதாவுக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பரிசளித்த பர்கூர் தொகுதியில் களமிறங்க அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யும் கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, சிந்தகம்பள்ளியைச் சேர்ந்தவர் தம்பிதுரை. ஆங்கிலப் புலமை பெற்ற இவரை எம்.ஜி.ஆர். தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாய்ப்பளித்து வந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் தம்பிதுரைக்கு பா.ஜ.க. தலைவர்களோடும் நல்ல நெருக்கம் இருக்கிறது.
இந்நிலையில், எனது சொந்தத் தொகுதியான பர்கூர் மக்களுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன். அதனால் இம்முறை பர்கூரில் போட்டியிட எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறாராம் தம்பிதுரை. ஆனால், அ.தி.மு.க. தலைமை, தம்பிதுரையை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்பி அவரை டெல்லியில் வைத்துக் கொள்ளவே ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க.வின் அதிகார மையமாகச் செயல்படும் கே.பி.முனுசாமி கடந்த முறை பர்கூரில் தோற்றுப் போன கிருஷ்ணன் அல்லது தி.மு.க.விலிருந்து தன்னால் அழைத்துவரப்பட்ட இ.சி.கோவிந்தராசனை இம்முறை பர்கூரில் நிறுத்தி தம்பிதுரையை ஓரங்கட்ட நினைப்பதாகச் சொல்கிறார்கள்.