கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கர்நாடக முதல்வராக தான் வர வேண்டும் என்று சிலர் விரும்புவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் வர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள், சித்தராமையா தொடர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். சிலர் நான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்னும் சில பேர் வேறு சிலர் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப்பத்தை நீங்கள் தடுக்க முடியாது. தேர்தல் நேரமாக இருந்தாலும் சரி, அதன் பிறகும் சரி முதல்வர் பதவி குறித்து பேச்சு எழும்போதெல்லாம், தலித்துகள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. இது தவறு என்று நான் நினைக்கவில்லை. இவை அனைத்துமே கட்சி மேலிடத்தின் முடிவுக்கு உட்பட்டது. இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கட்சி மேலிடம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என தெரிவித்துள்ளார்.