தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், ஓவியருமான சிவக்குமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரகேகர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பக்கம் வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் டாக்டர் பட்டத்தை அளித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

ஓவியர்கள் சிவக்குமார் மற்றும் சந்ரு ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்காக பெருமை கொள்கிறேன். அதிலும் பல்துறை வித்தகரான அண்ணன் சிவக்குமாருக்கு இந்த பட்டம் அளிக்கப்பட்டது மிகவும் பொருத்தமான ஒன்று. சிவக்குமார் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல.. நல்ல ஓவியர், சிறந்த சொற்பொறிவாளர்.. இவரின் ஓவியங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது வீட்டிற்கே சென்று சுமார் ஒன்றரை நேரத்திற்கு மேல் பார்வையிட்டு உரையாடி இருக்கிறார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர்.

சிவக்குமார் அண்ணனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதில் எனக்குதான் பெருமை. அதே போல் ஓவியர் சந்ரு முற்போக்கு சிந்தனையாளர்.. தொல்லியல் துறையில் பணியாற்றிய போது, சிற்றன வாசல், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட ஓவியங்களை நகலெடுத்து அருங்காட்சியக பணிகளில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள ரவுண்டானாவில் உள்ள பல சிலைகள் இவர் உருவாக்கியதுதான். ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை.. இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவும் இல்லை.. 2021-ம் ஆண்டுக்கு பின் இந்த பல்கலைக்கழகத்தை இன்னும் செழுமைப்படுத்தி இருக்கிறோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இந்த அரசியல் மாண்பு நடுவில் இல்லாமல் போயிருந்தாலும், எதிர்காலத்தில் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். கலையையும், கலைஞர்களையும் போற்ற வேண்டிய நல்ல அரசின் கடமை. பட்டம் பெற்ற அனைவரும் காலத்தை கடந்து வாழும் படைப்பை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.