அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில், 30.12.2025- செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா,எம்.எல்.ஏ. தலைமையிலும்; ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக்கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.