அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் த.வெ.க.வில் இணைந்தார். அவரது இந்த முடிவு அரசியல் உலகில் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் இந்த இணைப்பு த.வெ.க மற்றும் அ.தி.மு.க. இடையேயான உறவை மேலும் சிக்கலாக்குகிறது. செங்கோட்டையன் த.வெ.க. கட்சியில் இணைந்ததால் விஜய் எடப்பாடி உடன் கூட்டணி வைப்பதை விரும்ப மாட்டார். அ.தி.மு.க. உடன் விஜய் செல்வதை செங்கோட்டையன் தடுத்து விடுவார். அ.தி.மு.க.வின் பழைய தலைவர்கள், பலரும் கூட த.வெ.க. பக்கம் வருவதற்கான வழியை செங்கோட்டையன் ஏற்படுத்தி கொடுப்பார்.
த.வெ.க.வைப் பொறுத்தவரை, செங்கோட்டையன் முதல் மூத்த முகமாக இருப்பார். கொங்கு மண்டல முகமாக மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க மூத்த அரசியல் தலைவராக செங்கோட்டையன் த.வெ.க.விற்கு பணிகளை செய்வார். செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் வாழ்க்கையை அறிந்த மூத்த வாக்காளர்களை த.வெ.க. கட்சிக்குள் ஈர்க்க முடியும். இப்போது த.வெ.க.விற்கு இளைஞர்கள் ஆதரவே அதிகம் உள்ளது.
வரும் நாட்களில் செங்கோட்டையன் வருகையால் மூத்தவர்கள் ஆதரவு அதிகரிக்கும். அ.தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள பாரம்பரிய வாக்காளர்கள் விஜய் பக்கம் திரும்பலாம். பலமான அ.தி.மு.க. நிர்வாகிகளின் வருகை காரணமாக.. அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்குகளும் விஜய் பக்கம் செல்வார்கள். மேலும், கட்சியின் உள் கட்டமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுடனும் செயல்பட வாய்ப்புள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்தவர் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட முடியும்.
தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை செங்கோட்டையனின் அனுபவம் மேம்படுத்தும். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களையே வகுத்தவர். அதன்படியே விஜயின் திட்டங்களை அவர் வகுக்க முடியும். செங்கோட்டையன் வருகையால் த.வெ.க.வில் வாக்குச்சாவடி அளவிலான மேலாண்மை மற்றும் அடிமட்ட ஒருங்கிணைப்பு மிகவும் வலுவடையும். கிராமப்புற மற்றும் பாரம்பரிய வாக்காளர்களிடையே த.வெ.க.வின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.