செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் இல்லை. அதனால் பதில் சொல்ல அவசியம் இல்லை. செங்கோட்டையன் குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரை கேளுங்கள் என்று கூறினார்.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை.

அதை தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, உள்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆட்சியில் இருக்கும் போதே சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த.வெ.க.வில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பற்றிய கேள்விக்கு, அகட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவரிடமே கேளுங்கள் என பதில் அளித்துள்ளார்.

அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் செயல்பட்டு வந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் நேற்று இணைந்தது குறிப்பிடத்தக்கது.