தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாள் விழா, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், வேலு நாச்சியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கண்டவர் வேலு நாச்சியார். அப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரை தான் தமிழக வெற்றிக்கழக கொள்கை தலைவராக ஏற்று உள்ளோம். தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில், 10-க்கு 8 பேர், விஜய்யை ஆதரிக்கிறார்கள் என்று ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள். ஒவ்வொரு இயக்கமும் ஒன்றிணைவது என்பது அவரவர்கள் முடிவு செய்யும் ஒன்று, பொறுத்திருந்துதான் அதை பார்க்க வேண்டும். தமிழக வெற்றிக் கழக தலைவர் தான் தமிழகத்தின் முதல்வர் என ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி தான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும். அவ்வாறு இணைப்பவர்களை வாழ்த்தி வரவேற்போம். மேலும், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் தாக்கி பேசுவது தமிழக வெற்றிக்கழகம் தான், அவ்வாறு இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

காய்கிற மரத்தில் கல்லடி படுவதைப் போல, வெற்றி என்ற முடிவை மக்களால் மிக விரைவில் தெரிவிக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்துதான், எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை, ஆளும் கட்சி எதிர்கட்சியின் குறைபாடுகளை சொல்வதில்லை, எல்லோரும் ஒருமுகமாக தமிழக வெற்றிக் கழகத்தை தாக்கி கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். த.வெ.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துக்களை பரிமாறலாம், பேச்சுவார்த்தை என்பது தலைவர் விஜய் உடன் கலந்து பேசுவது தான் பேச்சு வார்த்தையாக இருக்கும், பொறுத்திருந்து பாருங்கள், என்றார்.