தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் சமயசெல்வம் தலைமை வகித்தார். கூட்டமைப்பு செயலாளர் சரஸ்வதி,மாவட்ட செயலாளர் வீரகுமார், கூட்டமைப்பு பொருளாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் காளிமுத்து,பசும்பொன், பூமாதேவி, பஞ்சவர்ணம், கனிமொழி, ஜெயபால், மாரிமுத்து, செல்வம், சந்தன டெய்ஸி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் குருநாகலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய மாநில இளைஞரணி செயலாளர் சமயசெல்வம் பேசியதாவது,
தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் கொண்டு வந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை மத்திய மோடி அரடசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். தமிழகத்தில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் செயல்படக் கூடிய கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும். விரும்பிய நேரத்தில் தொழிலாளர்களை முதலாளிகள் பணி நீக்கம் செய்ய முடியும். ஆண்டுக்கணக்கில் உலகளாவிய போராட்டங்களுக்கு பின்பு 8 மணி நேர வேலை சட்டம் கிடைத்தது. அது தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எல்லா நிறுவனங்களிலும் பெண்கள் இரவில் பணியாற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இது போன்று தொழிலாளர்களுக்கு விரோதமான இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று பேசினார்.
இந்த கண்டன உரையின் தெத்தூர் கரடி மற்றும் ஆர். செல்வி, ரமேஷ், பாண்டி, முத்துக்குமார், ஜெயசந்திரன், கருப்பையா, பழனி, குலகன், பாலசுப்பிரமணியன், மகேஸ்வரி உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.