மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று மதுரை மாவட்​டம் எழு​மலை​யைச் சேர்ந்த ராம.ரவிக்​கு​மார் தொடர்ந்த வழக்​கில், தீபம் ஏற்​றலாம் என உயர்​நீ​தி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் உத்​தர​விட்​டார். ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் நிர்​வாகம் தீபம் ஏற்​ற​வில்​லை. தொடர்ந்​து, மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மற்​றும் 10 பேர் அடங்​கிய குழு​வினர் மலைக்​குச் சென்று தீபம் ஏற்​ற​வும் போலீசார் அனு​மதி மறுத்​தனர்.

தனி நீதிப​தி​யின் உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் மேல் முறை​யீடு செய்​த​போ​தி​லும், உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் கொண்ட அமர்வு அதை தள்​ளு​படி செய்​தது. உத்​தரவை அமல்​படுத்​தாத​தால் அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குத் தொடுக்​கப்​பட்​டது. அதே​நேரம், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்​முறை​யீடு செய்​தது. இந்த மனு விரை​வி்ல் விசா​ரணைக்கு வர உள்​ளது.

இதற்​கிடையே, மலை உச்​சி​யில் உள்ள தூண், கார்த்​திகை தீபத் தூண்​தான் என்று ஒரு தரப்​பினரும், இல்லை அது நில அளவீட்​டுக்​கல் (சர்வே கல்) என்று மற்​றொரு தரப்​பினரும் தகவல்​களை பரப்பி வரு​கின்​றனர். தமிழக அரசின் தொல்​பொருள் ஆய்​வுத்​துறை 1981-ல் வெளி​யிட்ட திருப்பரங்குன்றம் எனும் நூலில், மலை உச்​சி​யில் உள்​ளது கார்த்​திகை தீபத்​தூண் என குறிப்பிட்டுள்​ளது.

இந்​நூலின் 129-வது பக்​கத்​தில், மலை அடி​வாரத்​திலிருந்து மலைக்​குச் சென்​றால் பாதி வழி​யில் தீபத்​தூண் ஒன்று இருப்​ப​தைக் காணலாம். இந்​தத் தூண் நாயக்​கர் காலத்​தைச் சேர்ந்​தது. கல்​வெட்​டுக்கு மேல் அனு​மன் ஒரு கையை ஓங்​கிக்​கொண்​டு, முகத்தை இடது பக்​கம் திரும்​பிக் கொண்டிருக்​கும் சிற்​ப​மும் உள்​ளது. இந்த தீபத்​தூண் ஆண்​ட​வனுடைய தலை​யின் உச்​சி​யில் நாட்​டப்​பட்​டிருப்​ப​தாக​வும், இதில் புண்​ணி​ய​வான்​கள் அனை​வரும் விளக்​கேற்​றலாம் என்​றும் அக்கல்​வெட்டு குறிப்​பிடு​கிறது என்ற தகவல் இடம்​பெற்​றுள்​ளது.

தமிழக அரசின் தொல்​லியல் துறையே கார்த்​திகை தீபத்​தூண் என குறிப்​பிட்​டுள்ள நிலை​யில் தமிழக அரசின் தொல்​லியல் துறை துணை இயக்​குநர் யதீஷ்கு​மார் தலை​மை​யில், உதவி இயக்குநர் லோக​நாதன் மற்​றும் தொல்​லியல் அலு​வலர்​கள் 7 பேர் கொண்ட குழு​வினர் திருப்பரங்குன்றம் மலை​யில் ஆய்வு மேற்​கொண்​டனர். காலை 8 மணியி​லிருந்து பகல் 12 மணி வரை தீபத் தூணின் முழு பகு​தியை ஆய்வு செய்​து, அதில் உள்ள விவரங்​களை நகல் எடுத்​தனர். ஆனால் இந்த ஆய்வு தொடர்​பான எந்த தகவலை​யும் தொல்​லியல் துறை​யினர் வெளியிடவில்லை.