பா.ம.க.வின் ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளுடன் தி.மு.க தரப்பு நெருக்கமாகி விட்டதாக தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால், 5 சீட்கள் வரை ஒதுக்கப்படும் என்றும் சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த அன்புமணி கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பா.ம.க.வில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்திலேயே தொடர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வரும் சூழலில், இன்னும் 4 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதனிடையே இரு தரப்பும் மாம்பழ சின்னத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
அதே போல் அன்புமணி அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டார். ஆனால் ராமதாஸ் தரப்பை எப்படி சமாளிப்பது என்பதே அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் தலைவலியாக மாறியுள்ளது. ஏனென்றால் அன்புமணி உடனான மோதலை பயன்படுத்தி தி.மு.க. தரப்பு ராமதாஸ் உடன் நெருங்கி விட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
விஜய்யின் எழுச்சி காரணமாக தி.மு.க. கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைக்க மு.க. ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். அந்த வகையில் வட மாவட்டங்களில் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்ய ராமதாஸ் தரப்பு ஆதரவு தேவையாக இருக்கிறது. இதற்கு விஜய்யின் வருகையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை தி.மு.க. கூட்டணிக்கு வர ராமதாஸ் ஒப்புதல் கொடுத்தால், அவர் தரப்புக்கு 5 சீட் வரை ஒதுக்கலாம் என்று மு.க. ஸ்டாலின் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனால் ராமதாஸ் ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் தி.மு.க. நிர்வாகிகள் இருந்து வருகின்றனர். அதே போல் தி.மு.க. கூட்டணியில் இணைந்தால், அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் ராமதாஸை பயன்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.