திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா இன்று நடைபெற உள்ளது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

இன்று முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும். அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.