சென்னை, செப். 29-
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் விசிக கொடியையோ, விசிக நிர்வாகிகளையோ ஆளுங்கட்சியான தவெக கண்டுகொள்ளாதது விவாதமாகி இருக்கிறது.
மதுராந்தகம் தொகுதியில் வன்னியர்களின் வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக வாக்குகளை கைப்பற்ற தவெக இப்படியான வியூகத்தை பின்பற்றி வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. மீண்டும் தவெக, திமுக மற்றும் அதிமுக என்று களம் சூடுபிடித்திருப்பதால், 3 கட்சிகளுக்கு இடையிலும் கடுமையான போட்டி நிலவும் என்று பார்க்கப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் சமூக ரீதியிலான வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது.
இதற்கேற்ப ஆளுங்கட்சியான தவெக வியூகம் அமைத்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்து தலித் ஆதரவு அரசாக பெயர் பெற்றது. அமைச்சரவையில் 8 தலித்துகளுக்கு இடம் கொடுத்துள்ளதாக விஜய் பெருமையுடன் பேசினார். இது தலித் மக்களிடையே வரவேற்பை பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கின்றனர்.
அதேபோல் தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பாமக தரப்பில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆளும் தவெக உற்சாகம் அடைந்திருக்கிறது. அதேபோல் வன்னியர்கள் வாக்குகளை தங்கம் பக்கம் திருப்ப சில வியூகங்களை பின்பற்றி வருகிறது.
அதாவது விசிகவை தங்களின் பிரச்சாரத் திட்டத்தில் தவெக சேர்த்து கொள்ளவில்லை. விஜய்யுடன் திருமாவளவனை மேடையேற்ற விசிக முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை. இன்னொரு பக்கம் விஜய்யுடன் பிரச்சார வாகனத்தில் விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் கூட கட்டப்படவில்லை.
வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் கூட விசிக கொடி கட்டப்படவில்லை. தற்போது விசிக தாமாக முன் வந்து பிரச்சாரக் கூட்டத்தை நடத்த இருக்கிறது. அந்த கூட்டத்திலும் கூட தவெக தலைமையில் இருந்து யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சமூக ரீதியிலான வாக்குகளை அறுவடை செய்வதற்காக விசிகவை தவெக ஒதுக்கி வைத்திருப்பதாக சில பேச்சுகள் எழுந்துள்ளன.