சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பல்லடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் மகளிர் மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டங்கள் நடத்தும் இயக்கம் தி.மு.க. அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் வந்து மக்களை சந்திக்கும் தலைவர்களும் அல்ல. முதல்வர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். தொடர்ந்து மக்களை சந்திக்கும் இயக்கம்தான் தி.மு.க. எனவே, தேர்தல் நேரங்களில் அனைத்து இயக்கங்களும் மாநாடுகளை நடத்துவது ஒரு வழக்கமான ஒன்றுதான்.
தேர்தல் சமயத்தில் மகளிர் மாநாடு, இளைஞரணி மாநாடு போன்றவற்றை நாங்கள் நடத்த இருக்கிறோம். அதே நேரத்தில், இதற்கு முன்பாகவும் தொடர்ச்சியாக மகளிரை சந்திக்கும் கூட்டங்களும், மகளிர் அணியினருடன் நடைபெறும் சந்திப்புகளும், இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இண்டியா கூட்டணி குறித்த கேள்விக்கு, அவருடைய ஆரூடங்களுக்கும் ஆசைகளுக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அவர் கனவு காணட்டும். தப்பு இல்லை, கனவு கண்டு கொண்டே இருக்கட்டும். நிச்சியமாக பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ளட்டும் என்று கூறினார்.