அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று இன்று புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டல மண்டலமாக வலுப்பெற கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும். குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரிக்கடல், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது தவிர தென் கிழக்கு அரபி கடல் பகுதியிலும் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றாக இணைந்து நகர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை நீடிக்கும். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். 28-ம் தேதி திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலும், 29-ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற இடங்களிலும் கனமழை பெய்யும். 30-ம் தேதி திருவள்ளூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். மணிக்கு 35 முதல் 50 கி.மீ.வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.