மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் மீட்பு உரிமை கழகமாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தேன்.

தொண்டர்களின் எண்ணத்தையும் அமித்ஷாவிடம் கூறினேன். பிரிந்திருக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே அமித்ஷாவுடன் வலியுறுத்தினேன். எம்.ஜி.ஆர் தொண்டர்களின் இயக்கமான அ.தி.மு.க. எப்போதும் பிளவுபடாது. ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதே போல் தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை. தனிக்கட்சி தொடங்குவதாக நான் சொன்னேனா என்று அவர் கூறினார்.