டெல்லி மாநகராட்சியில் காலியாக உள்ள, 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஏராளமான முதியோர் காலையிலேயே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனாலும், மாலை 4:00 மணி நிலவரப்படி 31.3 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன.
அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. டெல்லி மாநகராட்சியில் 12 வார்டுகளில் கவுன்சிலர் பதவி காலியாக இருக்கின்றன. இதில், ஒன்பது வார்டுகள் பா.ஜ.,விடமும், மூன்று வார்டுகள் ஆம் ஆத்மியிடமும் இருந்தன. காலியாக உள்ள இந்த 12 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
காலை 7:30 மணிக்கு துவங்கிய வாக்குப்ப் பதிவு மாலை 5:30 மணிக்கு நிறைவடைந்தது. பா.ஜ.க, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை என, 26 பெண்கள் உட்பட 51 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 143 இடங்களில் 580 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 2,320 தேர்தல் அலுவலர்கள், 2,265 பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.பாதுகாப்புப் பணிக்கு 580 ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.