கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வகித்து வருகிறார். இந்நிலையில், டி.கே.சிவக்குமார் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்று அவருடைய தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு டி.கே.சிவக்குமார் சென்றார். அங்கு அவர்கள் இருவரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, சாம்பார், உப்புமாவுடன் உணவு அமர்க்களப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை ன்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதில் எந்த குழப்பமும் இல்லை. சில ஊடக நிருபர்களே குழப்பம் விளைவித்து வருகின்றனர் என்று கூறினார்.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் வீட்டிற்கு முதல்வர் சித்தராமையா இன்று செல்ல உள்ளார். அங்கு அவர்கள் இருவரும் காலை உணவு சாப்பிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை என்பதை தெளிவுபடுத்த இதனை அவர்கள் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 8-ம் தேதி கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதுவரை சித்தராமையா மாநில முதல்வராக தொடர்வார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.