சென்னை அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதியன்று, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மாவின் நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித் தமிழர் எடப்பாடி மு.பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.
அதனையடுத்து எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு, அம்மாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவரும், அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே அம்மாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செய்திட வேண்டும்.
அதே போல் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் டிசம்பர் 5-ம் தேதியன்று ஆங்காங்கே அம்மாவின் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.