லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் கூலி. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி ஜெயிலர் 2 வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக இப்படத்தின் வில்லனாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.