கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி விஜய் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து விஜய் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து ஈரோட்டில் நேற்று முன்தினம் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசினார். இதற்கிடையில், சேலத்தில் கடந்த 4-ம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அவரது கட்சி நிர்வாகிகள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் கடந்த 3-ம் தேதி கார்த்திகை தீபம், கடந்த 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது எனக்கூறி விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இந்நிலையில், ஈரோட்டில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலத்தில் இந்த மாதம் இறுதியில் (அதாவது 30-ம் தேதி) விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவரது கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.