முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமன்றி பல முக்கிய தலைவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதற்காக விஜயுடன் அவர்கள் தீவிரமாக பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று 26 அல்லது நாளை 27-ம் தேதிகளில் இந்த இணைப்பு நிகழ்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் அ.தி.மு.க. பேச்சு நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், வேகமாக வளர்ந்து வரும் புதிய கட்சியில் இணைவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால்.. செங்கோட்டையன் மட்டுமன்றி பல முக்கிய தலைவர்கள் விஜயின் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
செங்கோட்டையன் பல பத்தாண்டுகளாக தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, அவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விகளை எழுப்பியது. தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணையும் முடிவு, தற்போதுள்ள கட்சிகளில் அதிருப்தியில் உள்ள மற்ற மூத்த தலைவர்களையும் பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செங்கோட்டையன் மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் பின்னணி கொண்ட தலைவர்களும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் மக்கள் மத்தியில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
டெல்டா தலைவர் அதேபோல் டெல்டா மண்டலத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் விரைவில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது. அரசியல் கட்சியில் தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு மூத்த தலைவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் இணையவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இணைப்புப் பேச்சுவார்த்தையில், அரசியல் வியூக நிபுணர்களும், வணிக இடைத்தரகர்களும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அந்தத் தலைவரின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில், அதிகாரப் பகிர்வு, தேர்தல் வியூகங்கள் மற்றும் தமிழகத்திற்கான த.வெ.கா.வின் நீண்டகால இலக்குகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இணைப்பு, த.வெ.க. ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுக்கும் என்பதற்கான ஓர் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பு நடந்தால், அது சில கட்சிகளுக்குள் பிளவுகளை உருவாக்கலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய பாதையை வழங்குவதாகவும், தங்களது அனுபவத்திற்கு மதிப்பு கிடைக்கும் புதிய அரசியல் களத்தை வழங்குவதாகவும் இந்த தலைவர்கள் பலர் உணர்கின்றனர். அரசியல் ஆய்வாளர்கள், தமிழக வெற்றிக் கழகத்தை நாடும் தலைவர்களின் இந்த போக்கு நீண்ட காலமாகவே திட்டமிடப்பட்டு அதற்காக காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.