சபரிமலை கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய உணவு வழங்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது,

சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சன்னிதானத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்படும் என்றார்.