நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை த.வெ.க. ஆய்வு செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக, கேரளாவில் த.வெ.க. ஆதரவாளர்களின் சமூக வலைத்தள செயல்பாடு அதிகரித்துள்ளது. சாத்தியமான வேட்பாளர்களாகக் கருதப்படும் சிலர், சமூக நலன் சார்ந்த பணிகள், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் சமூகப் பங்கேற்புகள் குறித்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
த.வெ.க.வின் வருகை கேரளாவில் சிறிய அளவில் இருந்தாலும், கேரளத் தேர்தலில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கக்கூடும். கட்சி இன்னும் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால், வரும் மாதங்களில் ஒரு தெளிவான திட்டத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கேரளாவில் உள்ள த.வெ.க. தொண்டர்கள் சிறிய கூட்டங்களை நடத்தி, உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, ஆன்லைன் ஆதரவை திரட்டி வருகின்றனர். இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் முதல் அடியை எடுத்து வைப்பதற்கான தயாரிப்புப் பணிகளாகும்.
புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக முயன்று வருகிறதாம். தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதோடு சேர்த்து அடுத்த வருடம் புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறாராம். புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் த.வெ.க. தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். அதாவது புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறக்கப்பட வேண்டம் என்று விஜய் நினைக்கிறாராம். அங்கே புஸ்ஸி தலைமையில் தேர்தல் பணிகளை தீவிரமாக நடத்தி, அவரை அங்கே வெல்ல வைத்து முதல்வராக்கி விடலாம். தமிழகத்தில் செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவியை கொடுக்கலாம். இதனால் உட்கட்சி மோதல் வராது. தமிழகம் முழுவதும் இனியும் புஸ்ஸி ஆனந்தை நம்பி இருக்க முடியாது. செங்கோட்டையனை இனி கட்சிக்குள் முன்னிறுத்தலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புதுச்சேரிக்கு புஸ்ஸி சென்றால்.. தமிழகத்தில் த.வெ.க. உள்ளே மோதல்கள், கருத்து வேறுபாடுகள் குறையும் என்று விஜய் நினைக்கிறாராம்.