கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் ஹாக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மின்கோபுர விளக்கிலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர மைதான வளாகத்தில் வீரர்கள், வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஹாக்கி மைதானத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் மைதானத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரம் ஹாக்கி விளையாடினார். அதனைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
தமிழகத்தை விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றியிருக்கும் திராவிட_மாடல் அரசு சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ.10 கோடியில் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை திறந்து வைத்தோம். இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்கோபுர விளக்குகளுடனும், அனைத்து நவீன வசதிகளுடனும் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை போன்று கோவையிலும் நடைபெற இருப்பதில் மகிழ்கிறோம். இந்த ஸ்டேடியத்தை கோவையைச் சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் சிறந்த முறையில் பயன்படுத்தி, புதிய சாதனைகள் படைக்க என் அன்பும், வாழ்த்தும் என தெரிவித்துள்ளார்.