இந்திய அணியின் அடுத்த கோலி போல வருவதற்கான அனைத்து தகுதியும், சுப்மன் கில்லுக்கு உள்ளது என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில் 26. தற்போது நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சுப்மன் (5 சதம், 1 அரைசதம் உட்பட 950 ரன்) முதலிடத்தில் உள்ளார். இவரது சராசரி ரன் குவிப்பு 79.16 ஆக உள்ளது. 2025ல் பங்கேற்ற 11 ஒருநாள் போட்டிகளில் 490 ரன் எடுத்துள்ளார் (சராசரி 49.0).

டி-20 போட்டிகளில் மட்டும் தொடர்ந்து ஏமாற்ற, உலக கோப்பை தொடருக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டார். விரைவில் மீண்டும் டி-20 அணியில் இடம் பெற காத்திருக்கிறார். இதனிடையே மூன்று வித கிரிக்கெட்டிலும் அசத்திய இந்திய அணி முன்னாள் கேப்டன் கோலியுடன், சுப்மன் கில்லை ஒப்பிட்டு, விமர்சிக்கின்றனர். இது குறித்து இந்திய அணி முன்னாள், வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' இர்பான் பதான் கூறியதாவது,

இந்திய அணியின் சீனியர் வீரர் கோலி. இவர், 19 வயதில் அணியில் இடம் பிடித்தார். அப்போது, ஜாம்பவான் சச்சினுடன் கோலியை ஒப்பிட்டு பேசினர். இதுபோல, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், இளம் வீரராக உள்ளார். இவரை, இந்தியாவின் அடுத்த கோலி என கூறுகின்றனர். இதுபோன்ற ஒப்பீடுகள், கிரிக்கெட் அரங்கில் எப்போதும் இருக்கும். உண்மையில், இந்திய கிரிக்கெட்டில், அடுத்த கோலியாக வருவதற்கு தேவையான அனைத்து தகுதியும், சுப்மன் கில்லுக்கு உள்ளது. டெஸ்ட், ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பு வழங்கி உள்ளதால், கோலி போல, சுப்மன் கில் நட்சத்திர வீரராக வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அதிக பொறுப்புகளை ஏற்று, சவால்களை சந்திக்கும் போது, சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகலாம். இதற்கான திறமை சுப்மனிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.