கொரோனா பெருந்தொற்றால் அன்னை, தந்தை இருவரையும் இழந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவர்களின் பிரிவுத் துயரிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் ஒருவர், பெற்றோரின் அருமையையும் அவர்களை வாழும் காலத்திலேயே அன்போடு பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உருக்கமான நினைவுப் பதிவைப் சிவகங்கை முன்னாள் மாவட்ட சேர்மனும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான.பொன்மணி.பாஸ்கரன் இட்டுள்ளார்.
அந்தப் பதிவில், அன்பையும் பண்பையும் போதித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அருகில் இருந்து ஆறுதல் கூறி வந்த தாய், தந்தை இருவரையும் கொரோனா எனும் கொடிய நோயின் காரணமாக இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவர்களின் பிரிவு ஏற்படுத்திய வலியும், மனதில் பதிந்த நினைவுகளும் இன்னும் ஆறாத காயமாக இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் தங்களுக்காக வாழ்வதைவிட, தங்களுடைய பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவே அதிகம் உழைப்பவர்கள். தங்களின் வறுமையையும் துன்பங்களையும் பிள்ளைகள் உணரக்கூடாது என்றும், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றும் தியாகம் செய்பவர்கள். அத்தகைய பெற்றோரின் அன்பையும் அர்ப்பணிப்பையும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே உணர்ந்து மதிக்க வேண்டும் என அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பெற்றோரின் முதுமைக் காலத்தில் அவர்களை அன்புடனும் பொறுமையுடனும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களின் இயலாமையைச் சுமையாகக் கருதாமல், அவர்களுக்குத் தேவையான அரவணைப்பையும் மனநிறைவையும் அளித்து, அவர்களின் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாய், தந்தையுடன் வாழ்வது மிகப்பெரிய வரம் என்றும், இருவரையும் இழந்தவர்களுக்கு அவர்களின் நினைவுகளுடன் வாழ்வது வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பெரும் பாரம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பெற்றோரை இழந்த பின்னர் அவர்களின் அன்பையும் அரவணைப்பையும் மீண்டும் பெற முடியாத ஏக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
“முப்பிறவியில் பெற்ற பயனாய் இப்பிறவியில் என் பெற்றோரைப் பெற்றேன்; இனி எப்பிறவியில் அவர்களைக் காண்பேனோ?” என்ற அவரது உருக்கமான வரிகள், பெற்றோரை இழந்தவர்களின் மனவேதனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
பெற்றோரின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தை நினைவுகூரும் இந்தப் பதிவு, பெற்றோரைப் போற்றுவதும், அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதும் ஒவ்வொரு பிள்ளையின் முக்கியக் கடமை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.