மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி கைது செய்யப்பட்ட நர்ஸ்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு, 2021-ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது நர்ஸ்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்றக்கோரியும், கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தி.மு.க. அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து நர்ஸ்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக நர்ஸ்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான நர்ஸ்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட நர்ஸ்களை கைது செய்து அவர்களை பஸ்கள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர்.
இறக்கிவிடப்பட்ட நர்ஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக் கூறி, தி.மு.க. அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தி.மு.க. அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நர்ஸ்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021-ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.