தமிழகத்தை போன்று கேரளாவிலும் கவர்னர்கள் மூலம் முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கலாம் அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து கேரள கவர்னருக்கு எதிராக, அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கேரளா முதல்வர் பினராய் விஜயன் பரிந்துரைத்த பெயர்களை அம்மாநில கவர்னர் ஏற்று நியமனம் நடத்தாததை தொடர்ந்து கேரளா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை பல முறை விசாரித்த சுப்ரீம் கோர்ட், துணைவேந்தர்களை நியமிக்க, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்தக்குழு, இரண்டு பல்கலைக் கழகங்களுக்கும் தலா ஒரு பெயரை இறுதி செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென்று கவர்னர் ராஜேந்திர அர்லேகர் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி டிஜிட்டல் பல்கலைக் கழகத்துக்கு முதல்வர் பரிந்துரைத்த சஜி கோபிநாத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் தேர்வு செய்த சீசா தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கேரளா அரசு தரப்பும் ஒப்புதல் வழங்கியுள்ளது.