கேரளாவில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்குள்ள அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலை., டிஜிட்டல் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் முதல்வர், மாநில கவர்னர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள முதல்வரின் பரிந்துரையை கவர்னர் ஏற்காததால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பர்திவாலா, நீதிபதி விசுவநாதன் ஆகிய இருவரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் பினராய் விஜயனுக்கு கவர்னர் அளித்த பதிலை சீலிடப்பட்ட கவரில் அட்டார்னி ஜெனரல் வழங்கினார். கவர்னர் பதிலை படிக்க மறுத்த நீதிபதிகள், கேரள முதல்வர், கவர்னர் பதில்களை ஆய்வு செய்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி தூலியா குழுவுக்கு ஆணையிட்டனர். மேலும் 2 கேரள பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க தலா ஒருவரின் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் சீலிடப்பட்ட கவரில் பரிந்துரையை அறிக்கையாக டிசம்பர் 18-ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்றும் தூலியா குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை இடையே, சுப்ரீம் கோர்ட், கேரள மாநில கவர்னர், மாநில முதல்வர் இடையே ஒத்திசைவு ஏற்படாதது வருத்தம் அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.