மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அன்றாடம் பல வகையான போராட்டங்கள் தி.மு.க. அரசை எதிர்த்து நடைபெறுகிறது. தி.மு.க. மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது. தமிழகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை. முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, பீகார் என அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து உள்ளார்கள். அங்கு சமூக நீதியை நிலைநாட்டும் அரசு உள்ளது. தமிழகத்தில் சமூக அநீதி தான் உள்ளது.
தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். ஆனால் நிச்சயமாக பெரிய கூட்டணி முடிவாகும். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது இதுதான் எனது நிலைப்பாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.