மதுரை, அக். 10-

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதால் தொழில் வர்த்தகத் துறையினருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சீனியர் தலைவர் ரத்தினவேல், தலைவர் திருப்பதிராஜன் கூறியதாவது:

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்தியதன் மூலம் தொழில் வர்த்தகத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிசக்தி, போக்குவரத்துச் செலவின அதிகரிப்பு, விற்பனைத் தொகை வசூலாவதில் தாமதம், குறைந்து வரும் லாப விகிதம் போன்ற சவால்களை தொழில் வர்த்தகத் துறையினர் எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் நடைமுறை செலவுக்கான கடன்கள் (ஒர்க்கிங் கேபிட்டல் லோன்), நீண்டகாலக் கடன்களுக்கான வட்டியை அதிகரிப்பது தொழில் நிறுவனங்களின் நிதிநிலையை மேலும் பாதிக்கும். இந்த வட்டி உயர்வை, கடன் பெறும் நிறுவனங்களுக்கு வங்கிகள் முழுமையாக மாற்றினால், ரூ.ஒரு கோடி நிலுவைக் கடனுக்கு ஆண்டுக்கு ரூ.25ஆயிரம் வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

கடனுக்கான வட்டிச்சுமை அதிகரிப்பதால் புதிய தொழில் முதலீடுகள், தொழில் விரிவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் நுகர்வுத் தேவையும் குறையும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு நியாயமான வட்டி விகிதத்தில் நடைமுறை செலவுக்கான கடன்கள் கிடைப்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உறுதிசெய்ய வேண்டும். அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு வட்டி மானியச் சலுகை வழங்க வேண்டும். வட்டி உயர்வால் சரக்குகளுக்கான தேவை (டிமாண்ட்) குறைந்து அதன் காரணமாக சரக்கு தயாரிப்பு துறையும் வேளாண் துறையும் பாதிக்கப்பட

க்கூடாது என்றனர்.