குளோபல் செஸ் லீக் தொடரில் ஆனந்த், நகமுரா மோதிய போட்டி டிரா ஆனது
இந்தியாவின் மும்பையில் குளோபல் செஸ் லீக் தொடரின் 3-வது சீசன் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும். 3, 4-வது இடம் பிடிக்கும் அணிகள், 3-வது இடத்திற்கான போட்டியில் பங்கேற்கும். ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த், உலக கோப்பை வென்ற உஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்ற கேங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி, அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியை சந்தித்தது.
ஆனந்த், ஹிகாரு நகமுராவை (அமெரிக்கா) எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த் போட்டியின் 41-வது நகர்த்தலில் டிரா'செய்தார். கேங்கஸ் வீரர் ரவுனக் சாத்வானி (இந்தியா), முர்ஜினை வீழ்த்தினார். முடிவில் கேங்கஸ் அணி 12.0-3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ் அணி 9.0-10.0 என்ற கணக்கில் திரிவேணி கிங்சிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மும்பை வீராங்கனை ஹம்பி, ஜு ஜினெரிடம் தோல்வியடைந்தார். ஹரிகா (மும்பை), அலெக்சாண்ட்ரா மோதிய போட்டி டிரா ஆனது.
இதுவரை நடந்த போட்டி முடிவில் திரிவேணி (24 புள்ளி), கேங்கஸ் (15), ஆல்பைன் பைப்பர்ஸ் (15), மும்பை (12) அணிகள் டாப்-4 இடத்தில் உள்ளன. இன்று கடைசி நாளில் பைனலில் அசத்தும் அணி கோப்பை வெல்லலாம்.