தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் எம்.ஆர்.பி. நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் 500-க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது. செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று கூறினார்.