காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தும் காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அதனை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். ஐ.கே. குஜ்ரால் ஆட்சியின்போது, காப்பீட்டுத் துறையில் 20 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதனை பா.ஜ.க. எதிர்த்த அந்த நாளை நான் நினைவு கூர்கிறேன். 1997-98ல் இருந்து நாம் தற்போது கடந்து வந்திருப்பது மிக நீண்ட தூரம் எனத் தெரிவித்துள்ளார்.
வரும் 2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை மையப்படுத்தி காப்பீட்டுத் துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதமாக உள்ள நிலையில், அதனை 100 சதவீதமாக உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.