மதுரை, அக். 10-
மதுரை மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் காசநோய் இல்லாத ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காசநோய் இல்லாத ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளின் வட்டார மருத்துவ அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:
மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் மத்திய காசநோய் பிரிவால் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ‘காசநோய் இல்லாத ஊராட்சி’ என்கிற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் காசநோயை முற்றிலும் ஒழிப்பதை இலக்காகக் கொண்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் சளிப் பரிசோதனைகளின் எண்ணிக்கை, நோய் கண்டறிதல் விகிதம், சிகிச்சையால் குணமடைந்தோா் விகிதம், பன்மருந்து எதிா்ப்புப் பரிசோதனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உதவிகள் அடிப்படையில் காசநோய் இல்லாத ஊராட்சி தோ்வு செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற ஊராட்சிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு 35 ஊராட்சிகள், 2024-ஆம் ஆண்டு 92 ஊராட்சிகள், 2025-ஆம் ஆண்டு 130 ஊராட்சிகள் தோ்வு பெற்றன.