கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. சிறப்புக்குழு விசாரணை சரியான திசையில் பயணித்ததால் அதற்கும், அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் த.வெ.க. தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, அரசின் விரிவான வாதங்களை கேட்காமல் சி.பி.ஐ.-க்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அரசு அதிகாரிகள் பேட்டியளித்ததை காரணம் காட்டி சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட முடியாது. சட்டம்-ஒழுங்கு மாநில பட்டியலில் இருப்பதால், கூட்டநெரிசல் குறித்து மக்களுக்கு விளக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.