கம்பம், அக். 13-
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த, மதகுகளை சீரமைக்க சிறப்பு திட்டம் தயார் செய்து நீர்வளத்துறையினர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாசன வசதி, குடிநீர் தேவை, கிணறுகள், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க, மேய்ச்சல் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கண்மாய்கள் ஏற்படுத்தப்பட்டன. மழை காலத்தில் தேக்கி வைக்கப்படும் நீர் கோடைகாலத்தில் பயனுள்ளதாக இருந்தது.
கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டுப்படி குளங்கள், உத்தமபாளையம் தாமரை குளம், குப்பி செட்டி குளம், சின்னமனூரில் உடைய குளம், செங்குளம், கருங்கட்டான்குளம், புதுப்பட்டி இடையன்குளம், நாராயணத்தேவன் பட்டி கேசவபுரம் கண்மாய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இதில் இடையன்குளமும், கேசவபுரம் கண்மாய் மஞ்சளாறு நீர்பாசன பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் நேரடி பாசன வசதி இல்லை. மற்ற கண்மாய்கள் மூலம் நேரடி பாசன வசதி நடக்கிறது. இவை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு கண்மாயும் 50 ஏக்கருக்கு மேல் பரப்பளவு உடையது.
கண்மாய்களை தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் கண்மாய்களை ஆக்கிரமித்து தென்னந்தோப்பு, வயல்கள், புளியந்தோப்புகளாக மாற்றி உள்ளனர். இதில் கேசவபுரம்,இடையன்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம். விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று வர்த்தக பயன்பாட்டிற்காக வண்டல் அள்ளுவதால் கண்மாய்கள் அகழ்வாராய்வு மேற்கொண்டது போன்று காட்சியளிக்கின்றன. கண்மாய்களில் சீமை கருவேல மரங்களை அகற்றம் பணி அரைகுறையாக நிற்கிறது.
ஆக்கிரமிப்புகள், கரைகள் பலமிழந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் முழு அளவில் தண்ணீர் தேக்க முடிவதில்லை. அதே போல் கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் செல்லும் செல்லும் ஓடைகள் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூரில் உள்ள பாசன கண்மாய்களை சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கண்மாய் கரைகளை பலப்படுத்துவது, மடைகளை சீரமைப்பது, ஷட்டர்களை பழுதுநீக்குவது, தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். கண்மாய்களில் நேரடியாக சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வளத்துறை, விவசாயிகளை உள்ளடக்கிய ‘கண்மாய் பாதுகாப்புகுழு’ அமைக்க வேண்டும்.காணாமல் கண்மாய்கள், நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும்.