வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகரில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒரு கண்ணில் துரியோதனனும் மறுகண்ணில் துச்சாதனனையும் பார்க்கலாம். அவர் மிகவும் ஆபத்தானவர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது. வங்கதேச மக்களை முகாம்களில் அடைப்போம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவான மத்திய அரசின் மூத்த அரசு அதிகாரிகள் மேற்குவங்கத்தில் முகாமிட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றனர்.
நான் இதுவரை எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. எனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மேற்குவங்க பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டால், சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட தயாராக இருக்க வேண்டும். முன்வரிசையில் பெண்களும், அவர்களுக்கு பக்கபலமாக பின்வரிசையில் ஆண்களும் களமிறங்க வேண்டும்.
சாதாரண வங்க புலியைவிட, அடிபட்ட வங்க புலி ஆக்ரோஷமானது. நீங்கள் எங்களை தாக்கினால் எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அநீதியை தடுத்து நிறுத்துவோம். இந்த நேரத்தில் பொது மக்கள் யாரும் எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளுக்கு செல்ல வேண்டாம். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் பேசினார்.