மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் பகுதியில் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசுகையில்,
அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை. ஏமாற்றுபவர்களுக்கு கிடையாது. சூப்பர் ஸ்டார் சொல்வது போல லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடன் இருக்கும் அனைவரும் வரலாம். போதை பொருட்களை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை. இப்போது சினிமாவில் எதை எடுத்தாலும் வன்முறையாக உள்ளது. சென்சார் போர்டு இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் போட்டி. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லாரும் எம்.ஜி.ஆரின் புகழை தான் பாடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் என்றைக்காவது கலைஞர் ஆட்சியை அமைப்பேன் என்று சொல்லியுள்ளார்களா? என் பெரியப்பா எம்.ஜி.ஆர். என்றுதான் சொல்கிறார். அ.தி.மு.க.வில் இருந்து யார் விலகினாலும் எந்த ஒரு இழப்பும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் எத்தனையோ பேர் விலகினாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொண்டரை நம்பிதான் இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களை நம்பிதான் உள்ளார். அதை வெளியில் சொல்லவில்லை. தி.மு.க. நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை. இதை சொல்லியே நாம் ஓட்டு வாங்கி விடலாம். மதுரை மாநகராட்சி ஊழல் ஒன்று போதாதா? மாநகரில் உள்ள நான்கு தொகுதியில் வெற்றி பெற மூர்த்தி அல்ல, மும்மூர்த்தி வந்தாலும் முடியாது. மதுரை மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இதை செய்தால் 100 சதவீதம் நான்கு தொகுதிகளிலும் யாரை நிறுத்தினாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். எஸ்.ஐ.ஆரில் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்து விட்டார்கள். குடும்பம் ஒற்றுமையாக இருந்தால்தான் நல்லது என்று கலெக்டரிடம் தெரிவித்தேன் என்றார்.