எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக, 11 வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை, பல்லாண்டுகளுக்குப் பின் வெடித்துள்ளது. இதனால் சாம்பல் புகை பரவி வருகிறது. பல நுாறு மைல்களுக்கு வான்வெளியில் இந்த சாம்பல் பரவியுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த பகுதியில் பறப்பதை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.


இதை ஏற்று பல்வேறு விமான நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இன்றும், நாளையும் இயக்கப்பட வேண்டிய 11 விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்துள்ள விமானங்களின் பட்டியல் பின்வருமாறு:


அதன்படி நேற்று 25-ம் தேதி சென்னை – மும்பை, ஐதராபாத் – டில்லி,மும்பை - ஐதராபாத் – மும்பை,மும்பை- கோல்கட்டா – மும்பை ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்று பயண ஏற்பாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பயணிகளின் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ஆகாசா ஏர், இண்டிகோ, கே.எல்.எம் நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.