கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர் - ஊட்டி, ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் வருகிற 25-ம் தேதி முதல் ஜனவரி 26-ம்தேதி வரை இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி -மேட்டுப்பாளையம், குன்னூர் - ஊட்டி, ஊட்டி - கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி செல்லும்.

மறுமார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மலை ரயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.