ஊட்டி, அக். 18-
ஊட்டி ஏடிசி பகுதி ஊட்டியின் முக்கிய மத்திய பகுதியாகும். இங்குள்ள ஏடிசி மார்கெட் பகுதியில் காய்கறி கடைகள், மருந்து கடைகள், புத்தக கடைகள், ஒட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும் ஏராளமானனோர் நாள்தோறும் ஊட்டிக்கு வருகை புரிகிறார்கள். இதனால் இப்பகுதி பிஸியாக இருக்கும். குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ஏடிசி., வழியாகதான் செல்லும். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி விட்டு செல்பவர்கள் ஏடிசி பஸ் நிறுத்திற்கு வந்து பஸ்களில் ஏறி செல்வார்கள். மினிபஸ்கள் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லும். பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் வரும் போது சீட் பிடிப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஒடுகின்றனர். இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் மாலை நேரங்களில் பயணிகள் பஸ்களில் முண்டியடித்து ஏறுவதை தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.