பாட்டாளி மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும், நிலையில் கட்சியிலிருந்து விலகக் கூட தயாராக இருப்பதாக சமீபத்தில் பேசி இருந்தார் ஜி.கே.மணி. இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் அவரை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பா.ம.க. கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நிலவுகிறது. நான் தான் பா.ம.க. என நிறுவனர் ராமதாஸ் கூறி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தங்களைத் தான் அங்கீகரித்துள்ளதாக கூறுகிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே மணி தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனைக்கு தான் காரணம் இல்லை எனவும், யாரெல்லாம் துரோகிகள் என அன்புமணி நினைக்கிறாரோ அவர்களெல்லாம் கட்சியை விட்டு விலக தயார் என்றும், தனது எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பேசியிருந்தார். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் ஜி.கே. மணியை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.