உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொடட்ி தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

இன்று கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பர். இதே போல் வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படும். நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், மதுரையில் பழமைவாய்ந்த கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறும் சிறப்பு திருப்பலியில் போப் பங்கேற்று ஆசி வழங்குவார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.