ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இப்படம் விஜயின் கடைசி படம் எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, இப்படத்தின் பாடல்களான தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள செல்ல மகளே பாடல் நேற்று மாலை வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் இதற்கிடையே, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே, விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் இசை வெளியீட்டுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியா புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.