சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று எழுத்தாளரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் உதவி பதிப்பாசிரியருமான அ. வெண்ணிலா தொகுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் - முழுமையான அரசு ஆவணங்கள் என்ற நூலை வெளியிட, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். இந்நூல் தொகுப்பு, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்றுத் துறையின் சார்பில் வெளியாகிறது.
இந்நூலானது, 1927-ம் ஆண்டு சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் 1967-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், இந்தியைக் கட்டாயமாக்க அன்றைய ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த தொடர் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து காலவாரியாக தொகுக்கப்பட்ட ஆவணங்களின் அட்டவணையே ஆகும்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, உயர்கல்வித் துறையின் செயலாளர் பொ.சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.