பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.
இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார். இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார் என்று தெரிவித்தார்.