அ.தி.மு.க.வில் இருந்து அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகி வரும் நிலையில் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை அழித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியுமாக இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது கட்சியில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தி.மு.க. பக்கமா, விஜய் பக்கமா என பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்தான் அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தால் அது அ.தி.மு.க.வுக்கு பெரும் இழப்பாக இருக்கும். இதனால் த.வெ.கவுக்கு மூத்த அரசியல் பிரமுகர் கிடைத்து விடுவார் . எடப்பாடி தலைமையை ஏற்காமல் ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா என அடுத்தடுத்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி விட்டனர். ஆளுமை மிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு சிறப்பு மிக்க தலைவராக இருந்தார் என்பதுஅனைவருக்கும் தெரியும். ஆனால் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜானகி அணியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஜெயலலிதா தலைமையின் கீழ் பணியாற்ற விருப்பம் தெரிவித்தும் ஒருவரை கூட வெளியே விடாமல் அவர்களை கட்சியில் சேர்த்து மந்திரி பதவிகளையும் வழங்கினார். இதுதான் தலைமைக்கான பண்பு. இப்படி செய்தால்தான் கட்சி பலமடையும். இதே போன்று மூத்த நிர்வாகியாக இருந்த முத்துசாமி கட்சியை விட்டு வெளியேற நினைத்த போது அவருக்கு தன் கைப்பட கடிதம் எழுதி கட்சியில் தொடர்ந்து செயல்பட கோரிக்கை விடுத்தார். அவரை விடவா எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆளுமை படைத்தவர். அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு என்ன செய்யப் போகிறார். கிட்டத்தட்ட அனைவரும் உங்கள் காலில் விழாத குறையாக கட்சியில் சேர வேண்டும் என சொல்கிறார்கள். அவர்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் என்ன பிரச்சினை. இவை அனைத்தையும் பார்க்கும் போது அ.தி.மு.க.வின் கதையை எடப்பாடி பழனிசாமி முடித்து விடுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.