தமிழ்நாடு காங்கிரசில் தொடரும் உட்கட்சி பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.
60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி,சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழக மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.